நபிகளாரின் நற்போதனைகள்( பாகம் 4)
அண்டை வீட்டார்
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 6015)
விளக்கம்:
மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அண்டை வீட்டார் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுக்குச் செய்யும் உபகாரங்களின் மூலம் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவர்களுக்குத் தீமை செய்தால் தண்டனைனயும் கிடைக்கும்.
அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி நபிகளார் விளக்கும் போது வாரிசதாரர்களுக்கு நாம் எப்படிச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமோ அது போன்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் வீட்டில் குழம்பு வைத்தால் சற்றுக் கூடுதலாக வைத்து அண்டை வீட்டாருக்கும் கொடுத்து உதவுமாறு பணித்துள்ளார்கள். இதுபோன்று பெரிய பொருளாக இருந்தாலும் சரி சிறிய பொருளாக இருந்தாலும் சரி! அண்டை வீட்டாருக்குக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரும் வண்ணம் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு தொல்லை தருபவர்கள் இறை நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.ரமளானில் இரவுத் தொழுகை
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குவாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்:(புகாரி: 37),(முஸ்லிம்: 1391)
விளக்கம்:
இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதுடன் அந்த மாதத்தின் இரவு நேரங்களில் நின்று வணங்குவது நாம் செய்த முந்தைய சிறு பாவங்களை மன்னிப்பதற்கு உதவும் ரமளான் மாதம் முழுவதும் இறைவனின் அருள் நிறைந்த மாதமாகும் அந்த மாதத்தில் அருள் வாயில்கள் திறக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 1957) இந்த மாதத்தில் அதிகமதிகம் நன்மையான காரியங்களைச் செய்து கூடுதல் நன்மைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இறைவனுக்குச் செய்யும் கடமைகளில் தொழுகை முதலிடத்தை பெறுகிறது. அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். (முஸ்லிம்: 2157) எனவே ரமளான் மாதத்தில் இரவு நோரத் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.ஹஜ்ஜும் உம்ராவும்
ஒரு உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களில் பரிகாரமாகும். பாவம் கலவாத ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 1773)
விளக்கம்:
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்தக் கடமை மக்காவிலுள்ள கஅபத்துல்லாஹ் ஆலயத்திற்குச் சென்று வர வசதி உள்ளவர்களுக்குக் கடமையாகும். ஒருவர் இந்தக் கடமையை முறைப்படி செய்வதால் அவர் சொர்க்கத்திற்குரியவராக மாறி விடும் பெரும் பாக்கியம் கிடைக்கிறது.
முகஸ்துதிக்காக, மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லாமல் படைத்தவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் இஸ்லாம் கூறிய அடிப்படையில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் அவர் அன்று பிறந்த பாலகன் போல் ஆகி விடுவார் அதாவது எந்தப் பாவமும் செய்யாத குழந்தை போன்று தூய்மையான மனிதராக ஆகி விடுவார்.
இவ்வளவு பெரிய பாக்கியத்தைத் தரும் ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அத்துடன் அதைத் தூய எண்ணத்துடன் செய்யவும் முயல வேண்டும். அடுத்து, சிறிய ஹஜ் என்று சொல்லப்படும் உம்ரா எனும் வணக்கமும் நமது முந்தைய பாவங்களை இல்லாமல் ஆக்குவதற்கு உதவுகிறது. எனவே உம்ராச் செய்வதற்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.உயிருள்ளவனும் உயிரற்றவனும்
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
(புகாரி: 6407)
விளக்கம்:
மனிதனைப் படைத்த இறைவன் இவ்வுலகத்தில் ஏராளமான வசதி வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றான், அவன் கொடுத்த அருட்கொடைகளை கணக்கிட்டுப் பார்க்க முயன்றால் நாம் தோல்வியையே அடைவோம்.
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன், நன்றி கெட்டவன்.
(அல்குர்ஆன்: 14:34)
இந்த இறை வசனம், மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடையின் எண்ணிக்கையை அழகுற விளக்குகிறது. இவ்வளவு அருட்கொடைகளையும் அனுபவிக்கும் மனிதன், படைத்தவனை மறந்து வாழ்கிறான். படைத்தவனைப் பற்றி சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இவ்வாறு பெரும் அருட்கொடைகளை அனுபவித்து, படைத்தவனை மறந்திருப்பவன் இறந்தவனுக்குச் சமம் என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள், யார் படைத்தவனை எண்ணிப் பார்த்து அவனுக்கு அடிபணியவில்லையோ அவர்கள். இருந்தும் இல்லாதவர்களைப் போன்றவர்கள். எனவே படைத்தவன நினைத்துப் பார்த்து அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.கேட்பதற்கு ஏற்ற நேரம்
ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது நமது இறைவன் கீழ் வானிற்கு இறங்கி வந்து, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 1386)
விளக்கம்:
பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம். அதை, படைத்த இறைவனிடம் மட்டுமே நாம் கேட்க வேண்டும். அவனிடம் கேட்கும் துஆக்கள் ஏற்கப்படுவதற்கு என்று சில நேரங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். குறிப்பாக மக்களெல்லாம் உறங்கியிருக்கும் ஸஹர் நேரத்தில் நாம் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். மேலும் பாவம் செய்தவர்கள் அந்த நேரத்தில் பாவமன்னிப்புக் கோரினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
மனிதன் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளைச் சந்திக்கிறான். அவற்றைச் சரி செய்வதற்கும், அவனது தேவைகளை நிறைவு செய்வதற்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ். அவனிடம் பிரார்த்தனை செய்து தம் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு இந்த நேரம் ஏற்றதாகும்.
உலகில் பாவம் செய்யாத மனிதர்கள் யாருமில்லை. உலகின் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு, பாவங்களைச் செய்து வரும் மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படாத வரை மறுமையில் வெற்றி பெற முடியாது. மறுமையின் வெற்றிக்கு வித்திடும் பாவமன்னிப்புக்கு ஏற்ற இந்த நேரத்தில் பாவக் கறையை அகற்றி விடலாம்.

0 Comments